அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன.உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன.
உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில்.
நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமனவள்
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே.
என்னிடம் பரிசுப் பொருளாக ஒரு
ரோஜாவைக் கேட்கிறது உன் மௌனம் .
ஆனால் உன்னைக் காதலிக்க
ஆரம்பித்தபோதே பூக்களையும் நேசிக்க
ஆரம்பித்துவிட்டது மனசு .எப்படிப் பறிப்பேன்
ஒரு ரோஜாவை .
இவை இப்படித்தான் என்று நான்
நினைத்துக்கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு சுலபமாய் நீ பொய்யாக்கி
விடுகிறாய் .உதிர்வதென்பது எப்போதும்
சோகமானதுதான் என்கிற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற ஒரு சின்னப்
புன்னகை பொய்யாக்கிவிடுகிறதே.
No comments:
Post a Comment